மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள மம்முட்டி இதுவரை 400 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு(2021) நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த தி ப்ரிஸ்ட் மற்றும் ஒன் புதிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் பீஷ்ம பருவம் எனும் அதிரடி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பீஷ்ம பருவம் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மம்முட்டியின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது.

முன்னதாக இயக்குனர் ரதீனா இயக்கத்தில்  மம்மூட்டி மற்றும் பார்வதி இணைந்து நடிக்கும் புழு திரைப்படம் தயாராகி வருகிறது. இதனையடுத்து அங்கமாலி டைரீஸ் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.

நண்பகல் நேரத்து மயக்கம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை நடிகர் மம்முட்டி தனது மம்முட்டி கம்பெனி சார்பில் தயாரித்து நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.