தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை அனுஷ்கா செட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்து அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளிவந்த நிசப்தம் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படத்தை ,தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிரீஷ்ணா ரெட்டி தயாரிக்கவுள்ளார். முன்னதாக யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா நடித்த மிர்ச்சி மற்றும் பாகமதி ஆகிய திரைப்படங்கள்  ஹிட் அடித்ததை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் விதமாக மீண்டும் இணைந்துள்ளது இந்த வெற்றி கூட்டணி.

நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 7ஆம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்குகிறார். அனுஷ்காவின் 48-வது திரைப்படமான இந்த புதிய திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.