40 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி, பணியாரம் விற்பனை செய்து வரும் மூதாட்டிகளுக்கு குடும்ப அட்டை உடனடியாக வழங்க சேலம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சேலம் நகரத்தை ஒட்டியுள்ளது எஸ். நாட்டமங்கலம் என்ற கிராமம். இந்தப் பகுதியில் ருக்குமணி அம்மாள் மற்றும் ராஜேஸ்வரி அம்மாள் ஆகிய இருவரும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதேப் பகுதியில் இட்லி, பணியாரம் விற்பனை செய்து வருகிறார்கள்.

கொரோனா காலத்திலும், கடந்த ஆண்டு வரை ஒரு ரூபாய்க்கு இட்லியும், ஒரு ரூபாய்க்கு பணியாரமும் என்ற விலையிலேயே இந்த மூதாட்டிகள் விற்பனை செய்து வந்தனர். இந்தநிலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது 5 இட்லி 10 ரூபாய்க்கும், பணியாரம் ஒன்று, ஒரு ரூபாய்க்கும், ருக்குமணி அம்மாள் மற்றும் ராஜேஸ்வரி அம்மாள் விற்பனை செய்து வருகிறார்கள்.

90 வயது கடந்த ருக்குமணியம்மாள் தான் மாவு ஆட்டுகிறார்.  பொதுநல சேவையாக தினசரி,  ருக்குமணி மற்றும் ராஜேஸ்வரி ஆகிய மூதாட்டிகள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள நான்கு கோவில்களை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கோலமிட்டு வருகிறார்கள்.

S1

இந்தப்பணி நிறைவடைந்த பிறகு தான் இட்லி பணியாரம் வேலையை இந்த மூதாட்டிகள் செய்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் வேறு யாரும் இல்லை. ஆதரவு இன்றி தனியாக வசித்து வரும் இவர்களுக்கு அரசின் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் கிடைக்கிறது. 

இந்த மூதாட்டிகளுக்கு ரேஷன் கார்டும் இல்லை என்று அங்கிருந்த மக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கேட்டறிந்தபோது கார்டு இருந்தால் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் அடைவோம் என்கிறார்கள் மூதாட்டிகள். 

S2

இந்நிலையில், தங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு மூதாட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மூதாட்டிகளின் நிலை ஆட்சியர் கார்மேகத்தின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. உடனடியாக  மூதாட்டிகளுக்கு ரேஷன் கார்டு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று மதியம் சேலம் மணியானுர் பகுதி தாசில்தார் நேரில் வந்து, 10 கிலோ அரிசியும், புடவையும் கொடுத்துவிட்டு, ராஜேஸ்வரி மற்றும் ருக்குமணி ஆகிய இருவரின் ஆதார்கார்டு எண்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ஐந்து நாட்களில் ரேஷன் கார்டு கொண்டு வந்து வழங்குவதாக சொல்லிவிட்டு   தாசில்தார் சென்றுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு மூதாட்டிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.