திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

MURUGANT

தமிழ்நாட்டில் பிரபலமான திருக்கோவிலான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த மாதம் தெரிவித்திருந்தார். 


 ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து  தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

அதில் திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலை ரூ.300 கோடி செலவில் மேம்படுத்த ஒருங்கிணைந்த பெருந்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரத்தை தரிசிக்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாலைமுரசு நிர்வாக இயக்குனர் மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், எச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், திருக்கோவிலில் அடிப்படை வசதிகள், தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீ அணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவரச ஊா்தி, யானைகள் பாராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்தும், அங்கபிரதக்ஷனம் செய்யும் பக்தா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும், பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டம் குறித்தும்,  அன்னதானக் கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1000 நபா்கள் ஒரே நேரத்தில் உணவருந்து அளவுக்கு திட்டங்கள் தயாா் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.