இந்திய சினிமாவின் மகத்தான கலைஞராக ஆகச் சிறந்த படைப்புகளை கொடுத்து கலைஞானியாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன், தடைகள் நீங்கி மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வேகமெடுத்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து வழங்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும்  தனது 234 வது திரைப்படமான KH234 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் ஃபக்த் பாசில் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த நிலையில், மீண்டும் தற்போது கமல்ஹாசன் - லிங்குசாமி கூட்டணி புதிய படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ஆசியாவின் முதல் ஸ்பிலிட் ஸ்கிரீன் படமாக தயாராகி இருக்கும் பிகினிங் பட விழாவில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, “சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்தேன். உத்தம வில்லன் படத்தை அடுத்து புதிய படத்தில் இணைவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாகும்” என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் இந்த அறிவிப்புக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.