இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காட்டேரி. யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கிய இவரது திகில் கலந்த நகைச்சவை படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படம் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இருந்தது. ஆனால், திடீரென்று ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது. கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. இதற்காக தமிழகமெங்கும் சுமார் 300 திரையரங்குகள் வரை ஒப்பந்தம் செய்து, படத்தினை தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வந்தார்கள். 

திடீரென்று நேற்றிரவு காட்டேரி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். காட்டேரி வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. 

இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத்தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ம் தேதி வெளிவர இருக்கும் காட்டேரி திரைப்பட வெளியீட்டைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த கொரோனா தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்ற ஆவலில் உள்ளனர் ஹாரர் பட விரும்பிகள்.