விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அவர் ஜெயலலிதா மாதிரி இல்லை பொம்மை போன்று இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள். தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. போஸ்டரை பார்த்தவர்கள் அரவிந்த்சாமி அப்படியே எம்.ஜி.ஆர். போன்றே இருக்கிறார் என்று பாராட்டினார்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லக் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இது குறித்து அரவிந்த் சாமி அவரது பதிவில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ஆக ஒரு மணிநேரம் நடித்தது வெறும் கவுரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. 

என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவில் இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எம்.ஜி.ஆரை பார்த்தது மாதிரியே இருக்கிறது. அருமையான லுக். ரொம்ப பொருத்தம். படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். 

தலைவி படத்திற்காக கங்கனா ரனாவத் தன் உடல் எடையை ஏற்றி, குறைத்துள்ளார், பரதம் கற்றுள்ளார். அவர் முழு ஈடுபாட்டுடன் நடித்ததாக ஏ.எல். விஜய் தெரிவித்திருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.