17 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயது நபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்து உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில், கடந்த 9 ஆம் தேதி அன்று 17 வயது சிறுமி ஒருவரை, 31 வயதான பாலமுருகன் என்ற நபருக்கு அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

17 வயது சிறுமிக்கு நடைபெற்ற இந்த திருமணம் விவகாரம் குறித்து, அந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ரகசியமாகப் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சிறுமியைத் திருமணம் செய்த பாலமுருகனை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

அத்துடன், இது தொடர்பாக மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த திருமணம் இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றதால், இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அது போல், சேலம் மாவட்டத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான ராஜா பெரியசாமி என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் மகளிர் காவல் துறையினர், 42 வயதான ராஜா பெரியசாமியை அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, அங்குள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், இது தொடர்பாக அனைத்து தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளியான பெரியசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.