சேலம் மாவட்டம் ஓமலூரில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக தேர்தல் பரப்புரை பயணம் மேற்க்கொண்டு வருகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ‘’ கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் பாமக பெற்றதாக பேசப்பட்டு வந்தது, இந்த முறையும் பாமக பேரம் பேசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பாமக யாருடன் பேரம் பேசுகிறது என்ற எனக்கு தெரியாது. ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை, எங்களிடம் கொள்கைதான் இருக்கிறது” என்று கூறியிருந்தார். 


இதனால் பாமக தரப்பினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி கருப்பு கொடி காட்டி, தயாநிதி மாறன் கார்மீது கற்களை வீசி  தாக்குதல் நடத்தினர். தயாநிதி மாறன் ஓமலூரில் தங்கும் ஹோட்டல் முன்பும் பாமகவினர் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். 


இதன்பின்பு சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய தயாநிதி மாறன், ‘’ பாமக கூட்டணிக்காக  பல கோடி ரூபாய் பேரம் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.கூட்டணிக்காக பணம் வாங்கவில்லை என்றால் அதை மறுப்பதற்கு ராமதாஸும் அன்புமணியும் தயாராகவும் இல்லை.

இதை நான் வெளிப்படுத்தினால் தாக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்னோடு விவாதிக்க தயார் என்றால் நானும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். எப்போது பாமக வன்முறையை நம்பியிருக்கும் கட்சி. ஆனால் திமுக பனங்காட்டு நரி என்பதால் இந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று கூறினார்.