இந்திய திரையுலகில் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழும் கலைஞானி உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர்,இயக்குனர்,கதாசிரியர்,திரைக்கதையாசிரியர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர்,பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக இன்றும் வலம் வருகிறார்.

அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, செம்பன் வினோத் ஜோஸ், நரேன், ஆன்டணி வர்கீஸ் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் விக்ரம் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விக்ரம் படப்பிடிப்பில் சில தினங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து நேற்று (நவம்பர் 6ஆம் தேதி) உலகநாயகனின் பிறந்தநாள் பரிசாக விக்ரம் தி ஃபர்ஸ்ட் கிளான்ஸ் டீசர் வீடியோ வெளியானது. வெளியான 24 மணிநேரத்திற்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது விக்ரம் டீசர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.