தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் , ஹாலிவுட் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளிவர தயாராகி வருகிறது.

மேலும் பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் தனுஷ் நடித்துள்ள அட்றங்கி ரே, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கலைபுலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாறன் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார், “மாறன் திரைப்படத்தின் இசை பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன... நான்கு பாடல்களும் ஒரு மாறன் தீம் பாடலும் அடங்கிய மாறன் படத்தின் இசை விரைவில் வெளியாகும்” என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.