ஒட்டு மொத்த இந்திய திரையுலகின் அடையாளமாய், எண்ணற்ற சினிமா கலைஞர்களின் முன்னோடியாய், தன்னிகரற்ற நடிகராய், கலையின் மீது தீரா தாகம் கொண்ட கலைஞானியாய் திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று நவம்பர் 7ஆம் தேதி தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் உலக நாயகனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று நவம்பர் 6-ம் தேதி அட்டகாசமான அறிவிப்பு ஒன்று வெளியானது.

இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக காலம் கடந்து நிற்கும் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படமான KH234 திரைப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதனிடையே தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் இந்தியன் 2 திரைப்படத்தின் புதிய அட்டகாசமான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ஸ்பெஷல் போஸ்டர் இதோ…

 

Wishing our treasure, the multi-faceted talent @ikamalhaasan sir a very Happy Birthday! pic.twitter.com/Ra8Hze0amn

— Shankar Shanmugham (@shankarshanmugh) November 6, 2022