தொடரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் வெற்றி கொண்டாட்டம்... படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்கமான பரிசு! வைரல் வீடியோ

ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயம் பரிசு,Kalanithi Maran felicitates the people worked for Jailer with gold coins | Galatta

ஒட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயங்களை கலாநிதி மாறன் அவர்கள் பரிசளித்துள்ளார். முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தான் ஜெயிலர். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிய நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் ஒரு திரைப்படம்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பக்கா மாஸ் ஆக்சன் ஸ்டைல் என அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்து வெளிவந்த முதல் இரண்டு வாரங்களிலேயே 525 கோடிக்கு மேல் வசூலித்து இதுவரை தமிழ் சினிமா கண்டிராத மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அமேசான் பிரைம் வீடியோவிலும் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஜெயிலர் திரைப்படத்தின் இந்த இமாலய வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக காரை கலாநிதி மாறன் அவர்கள் பரிசளித்தார். தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு போர்ஷே ரக காரை பரிசளித்தார். மேலும் அப்போல்லோ மருத்துவமனையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் 100 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாயும் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் கேன்சர் சிகிச்சைகளுக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு 60 லட்ச ரூபாயும் வழங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது படத்தில் பணியாற்றிய 300 பணியாளர்களுக்கு தங்க நாணயங்களை பரிசளித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஜெயிலர் வெற்றி விழாவில் தயாரிப்பாளர்கள் கலாநிதி மாறன் , இயக்குனர் நெல்சன் கூட பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியதோடு படத்தில் பணியாற்றிய 300 பணியாளர்களுக்கு ஜெயிலர் என்றும் ஒரு புறமும் பின்புறம் சன் பிக்சர்ஸ் என்றும் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை பரிசளித்துள்ளனர். இந்த ஜெயிலர் வெற்றிக் கொண்டாட்டத்தின் வீடியோ இதோ…