நடிகர் ஜெயம் ரவியின் 25-வது படம் பூமி. இதை, லக்‌ஷமண் இயக்கியுள்ளார். இவர், ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவி ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். இமான் இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

பூமி திரைப்படத்தின் ரிலீஸ் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் வருகை தந்துள்ளனர் பூமி படக்குழுவினர். 11 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாய குடும்பத்தை சந்தித்தார். சிலம்பம், நடனம் என அரங்கை அதிர வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. 

மே 1-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்டது இதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. 

சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். பொங்கல் அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடியில் வெளியிடுவது பற்றி நடிகர் ஜெயம் ரவி கூறியிருப்பதாவது: பூமி படம் என் சினிமா பயணத்தில் மைல்கல். எனக்கு இது 25 வது படம் என்பதைத் தாண்டி என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட்-19 காலங்களில் வெளியாகும் படங்களில் இதுவும் சேர்ந்திருக்கிறது. உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. 

இந்தப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். பல பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து எனது படத்தை பார்த்து பண்டிகையை கொண்டாடி இருக்கிறீர்கள். இந்தப் பொங்கல் தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன் என்று கூறியிருந்தார். 

கடைசியாக படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. நாசா விண்வெளி வீரராகவும், விவசாயம் காக்கும் குடிமகனாகவும் காட்சியளித்தார் ஜெயம் ரவி.பொங்கல் விருந்தாக வெளியாகும் இப்படம் ரசிகர்களின் இதயத்தை குறிவைக்கும் என்று கூறினால் மிகையாகாது. நடிகர் ஜெயம் ரவி மற்றும் பூமி படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.