மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் மோகன்லால் அவர்களின் மகனான பிரணவ் மோகன்லால் தற்போது மலையாள திரையுலகில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டின்(2021) இறுதியில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான மரக்கார் படத்தில் மோகன்லாலின் இளமை கதாபாத்திரத்தில் ப்ரணவ் மோகன்லால் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த ஆண்டு (2022) கடந்த ஜனவரி 21-ம் தேதி பிரணவ் மோகன்லால் நடித்த ஹிருதயம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மலையாள திரை உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழும் வினித் சீனிவாசன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

பிக் பேங்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் மேரிலேண்ட் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள ஹிருதயம் திரைப்படத்தில் தர்ஷனா ராஜேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன், விஜயராகவன், ஜானி ஆண்டனி, அஜு வர்கீஸ், அருண் குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்வாஜித் ஒடுக்கதில் ஒளிப்பதிவில் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

ரொமான்டிக்கான காதல் திரைப்படமாக வெளிவந்தது மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிருதயம் திரைப்படம் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் திரைப்படத்தின்  தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான ரீமேக் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரீமேக் படங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.