திறமை சார்ந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை உற்சாகப்படுத்த ஆண்டுதோறும் “கலாட்டா மீடியா” பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி, சிறந்த படைப்பாளர்களைக் கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, “கலாட்டா ஐ கானிக் உமான் விருது விழா” (Iconic women of television 2022) சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், “கலாட்டா ஐ கானிக் உமன் - தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பெண் செய்தி வாசிப்பாளராக” (Favourite News Reader) தேர்ந்தெடுக்கப்பட்டு, “கலாட்டா ஐகானிக் உமன் விருதை” இந்த முறை தட்டிச் சென்றிருக்கிறார் சன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஷமீனா நட்சத்திரா!

செய்தி வாசிப்பாளர் ஷமீனா நட்சத்திரா, “கலாட்டா விருது” பெற்றிருக்கும் இந்த தருணத்தில், அவரைப் பற்றி அவரிடமே பேசினோம்..

Shameena Nakshatra

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே நீலகிரி மாவட்டம் கூடலூரில். பள்ளி, கல்லூரி படிப்பும் அங்கேயே தான். Orthodox குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திறமைக்கு ஊக்கமளிக்கும் பெற்றோர்கள் கிடைத்ததால், பல துறைகளில் அறிவை வளர்த்துக்கொள்ள எந்த தடையும் இல்லை. பள்ளி பருவத்திலேயே படிப்பு, பாட்டு, நடனம், விளையாட்டு என ஒரு கலக்கு கலக்கியதுண்டு. எல்லாமே படிப்பினைகள் தான்.

என் வாழ்வின் முதல் 20 வருடங்கள், இயற்கை புடைசூழ அந்த மலைக்குன்றுகள் எழுந்து நின்று ஆர்ப்பாட்டமில்லாமல் அரவணைக்கும் இயற்கையின் எழில் மிகு அழகிலேயே நானும் வாழ்ந்துவிட்டுதான், சென்னையின் மாரத்தான் ஓட்ட வாழ்க்கையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன். 

அப்பா தமிழர், அரசு அலுவலர். அம்மா கேரளா. ஒரு சிறுதொழில் முனைவர். ஒரே ஒரு தம்பி என்று அளவான ஒரு நடுத்தர குடும்பத்தில் நான் வளர்ந்தேன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்று, சிறு வயது முதலே ஆசிரியர் ஆக வேண்டும் என்று இருந்த ஆசையிலும், கல்வித் துறையில் சாதிக்க வேண்டும் என்று இருந்த ஆர்வத்திலும், ஈரோடு மாவட்டத்திற்குப் பயணப்பட்டேன். 

நண்பர்கள் உதவியுடன் 6 மாத காலம் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்பு எதிர்பாராத நேரத்தில் எனக்குக் கிடைத்தது. மிகவும் உற்சாகத்தோடு அந்த பணி அமைந்திருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அது, குழந்தைகளின் உலகம். நான் நினைத்தது போலவே இயல்புலகம். மனம் விரும்பிய வேலை. மன நிறைவான வேலை. நல்ல ஊதியத்தைக் கொடுக்கும் வேலையைக் காட்டிலும், எப்போதும் ஒரு துடிப்பான, நாம் சிலாகித்து கூறக்கூடிய, மனதிற்கு நிறைவை நிம்மதியையும், ஒருவித ஆனந்த ஸ்பரிசம் தருகின்ற ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தில் தான் ஆசிரியர் பணியை என் மனம் தேடிச் சென்று ஏற்றுக்கொண்டது.

ஆனாலும்கூட, அதோடு அடைபட்டு விடக்கூடாதென்ற எண்ணமும் எனக்குள் இல்லாமல் இருந்திருக்கவில்லை. அதனாலோ என்னவோ, மூளை எனக்குள் இருந்துகொண்டே என் தேடலுக்குத் தீர்வு தேட ஆரம்பித்தது. அப்போது தான், என் கையை பற்றிக்கொண்டு என்னை இழுத்து வந்து இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது எனது அன்னைத் தமிழ்!

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், சிறுவயதில் கற்ற கலை கைகொடுக்கும் என்பதற்கு ஏற்பவே, என் வாழ்க்கை நகரத் தொடங்கியிருக்கிறது. 

நான் பயின்ற கல்வியைக் காட்டிலும், பயின்ற கலைகள் பின்னாளில் பெருமளவில் என் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்பதை நான் துளியும் எதிர்பார்க்காத ஒன்றுதான். எதிர்பார்க்காத ஒன்று நடப்பதுதானே வாழ்க்கையின் சுவாரஸ்யம்!

பள்ளிப் படிப்பு தமிழ் வழியில் என்பதாலும், மிக விருப்பப்பாடம் தமிழென்பதாலும், அதுவே தமிழ் மீதான என் அன்பின் காதலை அதிகரிக்கச் செய்தது. வீட்டில் தமிழ், மலையாளம் என்று இருவேறு மொழிகளில் பேசினாலும், தமிழ் மொழியின் மீதே அதிகம் என் பற்று இருந்தது. தமிழை உச்சரிக்கும் போது என்னை அறியாமல் ஒரு தன்னம்பிக்கையான மிடுக்கான ஒரு உணர்வு இப்போதும் என்னை ஆட்கொள்ளுவதுண்டு. அதுவே, நான் மேடை ஏறிய பேச்சு போட்டிகளில் என்னைத் தனித்துவமாக அடையாளப்படுத்தி, இன்னும் பல மேடைகளைப் பெற்றுத்தந்தது. அதே தமிழ் தான், இப்போதும் என்னை ஊடகத்துறையில் அடி எடுத்து வைக்க உந்தி தள்ளியது என்று சொன்னால், அதுதான் உண்மை.

என் திறமையின் மீது இருந்த நம்பிக்கையோடு மட்டுமே கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் துறந்து சென்னைக்குப் புறப்பட்டேன். 

பல கனவுகளோடு வந்த என்னை இனிதே வரவேற்கச் சிவப்பு கம்பளம் விரித்து நின்றது சென்னை.

சென்னையில், அதுவும் ஊடகத்துறையில் “வேந்தர் டி.வி” யில் முதன் முதலாக செய்தி வாசிக்கும் வாய்ப்பு என் பெரும் முயற்சிக்குப் பலனாகக் கிடைத்தது. என்னை சென்னை வரை கொண்டு வந்து சேர்த்த என் தமிழ், முதல் நாளில் நான் வேந்தர் டி.வி.யில் செய்தி வாசித்ததும், பல பாராட்டுகளையும் பெற்று தந்தது. 

ஊடகத்துறையில், இந்த துறைக்கான ஆரம்ப நிலை அறிவோடு நான் அடியெடுத்து வைத்தேன். அதன் பிறகு கற்றது பல. செய்வதைத் திறம்படச் செய்ய வேண்டும் என்ற பயம் கலந்த ஊக்கத்தோடு அன்று கேமரா முன் நின்றதை இன்றும் நான் நினைவு கூறுகிறேன்.

இந்த துறையில் நமக்கென்ற தனி அடையாளம் சவாலாகவே முன்னிற்கிறது. அதன் பின், இந்த துறையின் மகத்துவம் புரிந்துகொள்ளுதல், ஆழ அகலங்களை தெரிந்துகொள்ளுதல் என்ற ஊடக இயல்புகள் கற்கும் தருணங்களும் பயின்றேன். ஏனெனில், சமூக வளர்ச்சியின் இதன் பங்கு அவ்வளவு அதிகம். 

Shameena Nakshatra

அதே ஆர்வம் 'நியூஸ் 7 தமிழ், நியூஸ் 18 தமிழ்' என்று, இப்போது 'சன் டி.வி செய்திகள்' வரை, என்னை அழைத்து வந்து ஒவ்வொருவரின் வீடுகளுக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்த கால கட்டங்களில் தான் அதிகம் அரசியலைக் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

எல்லோருக்கும் போலவே இந்த சென்னை மாநகரம், என்னை நானாகவே ஏற்றுக்கொண்டது. மேம்பட்ட வாழ்வியலை கற்றுத் தந்துள்ளது. பள்ளி கல்லூரியில் கற்ற பாடத்தை விட, சென்னையில் வாழ்ந்த இந்த 7 வருட வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதே மிக அதிகம் என்றே சொல்லலாம். 

என் துறை சார்ந்து மட்டுமில்லாமல் வானவியல், அறிவியல், அரசியல், சமூக நீதி என்று பல பரிமாணங்களில் என் புரிதல்களை வளர்க்கவும் அதைப் பகுப்பாய்வு செய்யவும் எனக்கு வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தது. 

அதில், அதிக முக்கியம் சமூக நீதி. விளிம்பு நிலை மக்களின் குரலாகவும், பெண்களின் முன்னேற்றக் குரலாகவும் ஒலிக்க வைப்பதும் அதனால் தான். எனக்கும் அது, இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கப்போகிறது.

ஏற்கனவே இருந்த இலக்கிய ஆர்வத்தால் 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்திலிருந்து, 'இந்திய அரசியல் வரலாறு' போன்ற சிறந்த பல புத்தகங்களைப் படிக்கவும், பல சிறந்த ஆளுமைகளைக் காணவும், அப்படியான ஆளுமைகளுடன் சேர்ந்து பணி புரியவும் வாய்ப்புகள் எனக்கு அமைந்து போனது.

'எப்போதும் ஒரு இடத்தில் நின்றுவிடாதே' என்ற ஆகச்சிறந்த வாழ்க்கை பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதன் நீட்சியாகவே இன்று நடனம், யோகா, ஆடை வடிவமைப்பு என்று பல விடயங்களை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கிறேன். இதையும் தாண்டி எனக்கு இன்னொரு ஆர்வமுண்டு. வானியல்.. அதன் மீதான தேடல்.. ஈர்ப்பு, அதன் மீதான என் காதல் என்பது பறந்து விரிந்தது அது!

நான் பணிபுரியும் துறைக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்கள் மீது கொண்ட காதலாலும், அதில் ஒரு அணு அளவேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும், அவை சார்ந்த பல விடயங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இந்த விசயங்களில் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள நான் மேலும் சில வானவியல் புத்தகங்களை வாங்கி படித்துக்கொண்டுமிருக்கிறேன்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் என் முதல் தொலைநோக்கியையும் வாங்கிவிட்டேன். கூடிய சீக்கிரமே Astrophotography-ல் மேலும் எனக்கான திறன்களை வளர்த்துக்கொள்ள ஆசை. 'ஆசை யாரை விட்டது?' பிரபஞ்சத்தின் மீது இருந்த காதலால் தான்,  'நட்சத்திரா' என்பதை என் புனைபெயராகத் தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனாலும், அதுதான் உண்மை. எனக்கு நானே ஆசையாக வைத்துக்கொண்ட 'நட்சத்திரா' என்ற பெயர், அதுவே இன்று என் அடையாளமாகவும் மாறிப் போனது. 

இன்னும் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள, பிடித்த விடயங்களைத் தேடிச்செல்ல, இவ்வுலகின் மீதுள்ள அதீத அன்பினால், என் வாழ்க்கையை இன்னும் அழகாக்கிக்கொள்ள ஓடிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் ஓடுவேன்.. என் ஓட்டத்தின் ஒரு இடத்தில் என்னைத் தெரிந்த உங்களைக் கண்டால், ஒரு புன்னகை பூத்து, அந்த புன்னகையோடு மீண்டும் நான் ஓடத்தொடங்குவேன். என் ஓட்டத்திற்கு ஒரு புதிய உற்சாகமும், உந்துதலும் தாருங்களேன் நண்பர்களே..” என்று, கலகலப்பாகவே பேசி சிரிக்கிறார் ஷமீனா நட்சத்திரா.

பூத்துக்கொண்டே வானில் சிறகடியுங்கள் நட்சத்திரா! வாழ்த்துக்கள்!!

- அருள் வளன் அரசு