உலக அளவில் திரைத்துறையினரின் உயரிய விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கார் விருதுகள். அந்தவகையில் 94வது ஆஸ்கார் விருது விழா இன்று (மார்ச் 28) லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்திருக்கும் பிரமாண்டமான டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த கலைஞர்கள் ஆஸ்கார் விருதுகளை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்து இருந்த நிலையில் உலகளவில் பல கோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ட்யூன் (DUNE) திரைப்படம் 94வது ஆஸ்கர் விருது விழாவில் 6 விருதுகளை வென்று குவித்தது. மேலும் சிறந்த திரைப்படமாக கோடா (CODA) திரைப்படம் ஆஸ்காரை தட்டிச்சென்றது. இயக்குனர் ஜேன் கேம்பியன், பவர் ஆஃப் தி டாக் (POWER OF THE DOG) படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

இதனிடையே ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான வில் ஸ்மித் தான் நடித்த கிங் ரிச்சர்ட் (KING RICHARD) திரைப்படத்திற்காக முதல் முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார். முன்னதாக ஹாலிவுட்டின் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும் நடிகருமான கிரிஸ் ராக் ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்க்கான அறிவிப்பை வழங்க வந்தபோது வழக்கம் போல் தன்னுடைய ஜோக்குகளை அள்ளி விட தொடங்கினார்.

அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கட் ஸ்மித் குறித்து கிரிஸ் ராக் அடித்த ஜோக் சலசலப்பை ஏற்படுத்தியது. GI ஜேன் எனும் ஹாலிவுட் படத்தில் பெண் ராணுவ வீராங்கனையின் தலைமுடியற்ற தோற்றத்தயும் வில் ஸ்மித்தின் மனைவியையும் ஒப்பிட்டு கிரிஸ் ராக் பேசியது வில் ஸிமித்தை கோபமடைய செய்தது.

எனவே கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித் நேராக மேடைக்குச் சென்று கிரிஸ் ராக்கை ஓங்கி அறைந்தார். பின் மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்த வில் ஸ்மித் கோபமாக "என் மனைவி பற்றி பேசாதே" என ஆவேசமாக கூறினார். இந்த நிகழ்வு ஆஸ்கார் அரங்கிலும் உலகம் முழுக்க நேரலையில் கண்ட பார்வையாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வில் ஸ்மித் ஆஸ்கார் விருது பெற மீண்டும் மேடைக்கு வந்த பொழுது கண்ணீரோடு வருத்தம் தெரிவித்தோடு மன்னிப்பும் கேட்டார்.