தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி நட்சத்திர நாயகனாகவும் ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு பாராட்டுகளையும் அள்ளியது. 

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் TEST SHOOT நடைபெற்றது. ஜல்லிக்கட்டு, காளை மாடு மற்றும் மனிதன் இடையிலான உறவு மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழர்களின் கலாச்சாரம் குறித்து அதிகம் அறியப்படாத பக்கங்களை பற்றி அழுத்தமாகப் பேச இருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முன்னதாக ட்விட்டரில் ரசிகர்களுக்கு பதிலளித்த G.V.பிரகாஷ் குமார் இயக்குனர் பாலா-சூர்யா படத்திற்கான பாடல்கள் பதிவு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்புக்கு முன்னதாக அனைத்து பாடல்களையும் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 28) கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.