மத்திய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

strike

சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் 67% பஸ்கள் ஓடவில்லை எனவும் இயக்கப்பட வேண்டிய 15,335 பஸ்களில் 5,023 பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்டிசி - 318, எஸ் இடிசி - 40, விழுப்புரம் போக்குவரத்து கழகம்  573 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் -445, கோவை - 476, கும்பகோணம் -1705, மதுரை -801, திருநெல்வேலி -665 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 47 எஸ் இ டிசி பஸ்களில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 3,175 சென்னை மாநகர பஸ்களில் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னையில் வேலைநிறுத்தம்  காரணமாக பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை நேர பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர். பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90% பேருந்துகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.  

பேருந்துவிற்கு பதிலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பயணிக்க பொதுமக்கள்  கூட்டம் அதிகமாக ரயில் நிலையங்களில் காணப்படுகிறது. வேலைநிறுத்தம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக, ஆட்டோக்களில் பொதுமக்கள்  கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், குறைந்த அளவிலான ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

மேலும் அத்துடன் பொது வேலைநிறுத்தத்தால் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  ஆட்டோ, கார் ஓட்டுநர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமான பங்கேற்று உள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.