தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. 

இதனால் திட்டமிட்டபடி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தீபாவளி பண்டிகை என்பதால் தலைவர் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போயஸ் கார்டனில் இருக்கும் அவரின் வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர். தீபாவளி நாளில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு தோன்றினார். ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது. பட்டு வேட்டி சட்டை அணிந்து உற்சமாக தீபாவளியை கொண்டாடிய சூப்பர் ஸ்டாரின் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் படு குஷியாகினர். 

இந்நிலையில் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய படத்தொகுப்பாளர் ரூபனிடம், அண்ணாத்த படத்தின் அப்டேட் குறித்த கேள்வியை ரசிகர் ஒருவர் முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ரூபன், அண்ணாத்த அப்டேட் விரைவில் வரும்...நானும் அதற்கு தான் காத்திருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். 

சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படத்திற்கும் ரூபன் தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகின் பிஸியான எடிட்டர்களில் ஒருவரான ரூபனின் இந்த பதிவு இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.