“2021 ஆம் ஆண்டு மிக மோசமான உணவு பஞ்சம் ஏற்படும்” என்று, உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று தற்போது வரை பரவிக்கொண்டு இருக்கிறது. தற்போது, பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் 2 வது அலையை வீசிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து எழ முடியாமல் தற்போது வரை கடுமையாகப் போராடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவல் சற்று குறைந்து காணப்பட்டாலும், இன்னும் முழுமையான அளவுக்கு இயல்பு நிலை திரும்ப வில்லை. அத்துடன், இந்தியாவிலும் பொருளாதார நிலை, இன்னும் மந்தமாகவே தொடர்கிறது. 

இந்தியாவில், நாட்டு மக்களிடம் பண புழக்கம் இன்னம் முன்பை போல், காணப்படவில்லை. இதனால், இந்தியாவில் தீபாவளி பண்டியைக் கொண்டாடிப் பல மக்கள் புத்தாடை கூட எடுக்காமல் பட்டாசுகள் கூட வாங்காமல் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்றும், கூறப்படுகிறது. பல கடைகளில், விற்பனைக்காக வாங்கப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் பாதி அளவுக்கு கூட விற்பனையாகாமல், அப்படியே இருப்பதாகவும், வியாபாரிகள் கவலைத் தெரிவித்தனர்.

மேலும், சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு ஆண்டு இறுதியில் முதன் முதலில் காணப்பட்டதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளைப் பாரபட்சம் இன்றி, தற்போது வரை உலுக்கி எடுத்து வருகிறது. வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறக்குறைய தற்போது 11 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளன. ஆனாலும், தற்போது வரை கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் அனைத்தும், தற்போது வரை மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருக்கின்றன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்பது, அனைவரும் கண்கூடாகக் காணப்படும் ஒரு விசயமாகவே இருக்கிறது.

குறிப்பாக, உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் 2 ஆம் அலை தாக்கம் தொடரவே செய்கிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட உலக உணவுக் கழகத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெற்றுக்கொண்ட பிறகு, இது குறித்து உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி கூறும் போது, “ஐ.நா அமைப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை எச்சரிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “அடுத்த ஆண்டு, இந்த ஆண்டை விட மிக மோசமானதாக இருக்கும் என்றும், வரும் 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் உணவு பஞ்சம் ஏற்படும்” என்றும், அவர் கடுமையாக எச்சரித்தார். 

“இந்த பஞ்சத்தைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும், கொரோனா பாதிப்பை விட அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஊடகங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் கவனம் பெற முடியாமல் போய்விட்டது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார். 

“இதனால், இந்த நேரத்தில் நோபல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியானது. உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக நம்மால் இந்த 2020 ஆண்டில் பஞ்சத்தை ஓரளவிற்குத் தவிர்க்க முடிந்தது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால், இனி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.

அதே போல், “2020 ஆம் ஆண்டில் கிடைத்த பணம் மற்றும் நிதி உதவிகள் வரும் 2021 ஆம் ஆண்டில் கிடைக்கப் போவதில்லை என்றும். இதனால் பல நாட்டின் உலக தலைவர்களை நேரில் சந்தித்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்” என்றும், அவர் கூறினார்.

முக்கியமாக, “உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின் படி, அடுத்த 3 முதல் 6 மாதங்களில் 20 நாடுகள் இன்னும் அதிக மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள்ளான சாத்தியங்களை எதிர்கொள்ளக் கூடும் என்றும், அவற்றில் தெற்கு சூடான், ஏமன், வட கிழக்கு நைஜீரியா, புர்கினா பாசோ உள்ளிட்ட நாட்கள் அடங்கும் என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். இதனால், பல உலக நாடுகள் கவலை அடைந்து உள்ளன.