பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் அக்ஷய் குமார் கில்லாடி ,ஹவுஸ்ஃபுல் சிங் இஸ் கிங் என பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியாகி ஹிட்டான சிறுத்தை படத்தின் ரீமேக்கான ரவுடி ரத்தோர் மற்றும் நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரை படத்தின் ரீமேக்காக லட்சுமி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் பக்ஷிராஜன் என்ற கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்ததாக பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து அக்ஷய்குமார் நடிப்பில் உருவான அட்றங்கி ரே திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. 

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து திரையரங்குகள் திறந்ததும் வெளியாகக் கூடிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அக்ஷய் குமார் நடிக்கும் பெல்பாட்டம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் உளவுத்துறை RAW அதிகாரியாக நடித்திருக்கும் இந்த பெல்பாட்டம் திரைப்படத்தில் நடிகை வாணி கபூர் மற்றும்  ஹூமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக பல திரைப்படங்களும் தற்போது OTT யில் வெளியாகி வரும் நிலையில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் திரைப்படமும் OTT யில் வெளியாகும் என செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் வருகிற ஜூலை 27-ஆம் தேதி பெல்பாட்டம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. முன்னதாக வெளியான பெல்பாட்டம் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள பெல்பாட்டம் திரைப்படத்தின் ரிலீஸ் தகவல் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.