சின்னத்திரையில் மெகா தொடர்களில் முன்னணி கதாபாத்திரமாக நடித்து பிரபலமடைந்த அஸ்வின் குமார் சமீபத்தில் நடித்த ஆல்பம் பாடல்களான குட்டி பட்டாசு மற்றும் அடிபொலி ஆகிய பாடல்களும் யூ-டியூபில் வைரலாகின. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்த அஸ்வின் குமார் தற்போது வெள்ளித் திரையிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அஸ்வின் குமார் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் என்ன சொல்லப் போகிறாய். தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் அவர்களின் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் தேஜு ஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா கதாநாயகிகளாக நடிக்க, விஜய் டிவி புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் விவேக் மற்றும் மெர்வின் இணைந்து இசையமைத்துள்ளனர்.
 
இயக்குனர் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகியிருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் என்ன சொல்ல போகிறாய் ரிலீஸ் குறித்த ருசிகர தகவல் வெளியானது. அஸ்வின் குமார் முதல்முறை கதாநாயகனாக நடித்திருக்கும் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் நகரங்களில் காலை(7.00am)  சிறப்பு காட்சிகளோடு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. 

பொதுவாக நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியாகும் பெரிய படங்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் திரையிடுவது வழக்கம். ஆனால் அஸ்வின் குமார் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே சிறப்பு காட்சிகளோடு ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகர் அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன்பு… கதாநாயகனாக என் முதல் படம்… ஒரு சாமானியனின் கனவு.. இது எவ்வளவு அர்த்தமானது என்று எனக்கு மட்டுமே தெரியும்… நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்... இறைவனுக்கு நன்றி உங்கள் அன்பு! என தெரிவித்துள்ளார்.