இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் ராக்ஸ்டார் அனிருத்தின் தாத்தா S.V.ரமணன் இன்று (செப்டம்பர் 26) காலமானார். அவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தனது காந்தக் குரலால் ரேடியோவில் பல கோடி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த S.V.ரமணன் அவர்கள் பல விளம்பரப் படங்களுக்கும் தனது குரலால் பலம் சேர்த்துள்ளார். இயக்குனராக பல ஆன்மீகம் சார்ந்த ஆவணப்படங்களை இயக்கியுள்ள S.V.ரமணன் அவர்கள் தமிழ் சினிமாவிலும் இசையமைப்பாளராக இயக்குனராக பணியாற்றியவர்.

அந்த வகையில் தமிழ்சினிமாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் நடிகை சுஹாசினி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த உருவங்கள் மாறலாம் திரைப்படத்தை இயக்கி இசையமைத்திருந்தார் S.V.ரமணன். இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோர் கௌரவ தோற்றங்களில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இசையமைப்பாளரும் இயக்குனருமான S.V.ரமணன் அவர்கள்  இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், பொதுமக்களும், தமிழ் திரை உலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 

இயக்குனர் #SVRamanan காலமானார்! #RIPSVRamanan pic.twitter.com/yR8OgDSyyG

— Galatta Media (@galattadotcom) September 26, 2022