கடந்த வருடம் இதே நாள் தான் கடும் மன உளைச்சலில் இருந்தாகவும், இந்த வருடம் அது அப்படியே மகிழ்ச்சியான நாளாக மாறியுள்ளதாகவும் AGS Entertainment நிறுவன CEO தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று AGS Entertainment. இந்நிறுவனம் 2006ம் ஆண்டு கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் சகோதர்களால் துவங்கப்பட்து. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக(CEO) கல்பாத்தி எஸ்.அகோரம் அவர்களின் மகள் கல்பாத்தி அர்ச்சனா செயல்பட்டு வருகிறார்.

தமிழில் 2006ம் ஆண்டு 'திருட்டுப்பயலே' திரைப்படம் மூலம் தங்கள் தயாரிப்புப் பணியைத் துவங்கிய AGS நிறுவனம், தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், எங்கேயும் காதல், தனி ஒருவன், பிகில் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளது. இவர்கள் தயாரிப்பில் அண்மையில் வெளியாகி வசூல் சாதனை செய்த படம் லவ் டுடே.

இன்றைய 2K கிட்ஸ்களின் காதலை நகைச்சுவையும் ஜனரஞ்சகமும் கலந்தவாரு காட்சிப்படுத்தியிருந்த இத்திரைப்படம் பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ரங்கநாதன் தனது முதல் படமான கோமாளி மூலம் இயக்குநராக தமிழில் முத்திரை பதித்திருந்த நிலையில், இதில் ஹீரோ, இயக்குநர், பாடலாசிரியர் உள்ளிட்ட பல்வேறு ரோல்களை கையிலெடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். இதற்கு முன்னர் இவர் இயக்கி வெளியிட்ட App(a) Lock என்ற குறும்படத்தின் கதையைத் தழுவி இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இதன் பிக் வெர்ஷன் என்று கூட 'லவ் டுடே'-வைச் சொல்லலாம். 

இந்நிலையில், இப்படத்தைத் தயாரித்த AGS நிறுவனத்தின் CEO கல்பாத்தி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில் அவர், "இதே நாள் கடந்த வருடம் நான் கடும் மன அழுத்ததில் இருந்தேன். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் 50% இருக்கைகளுடன் 3 காட்சிகளாக பொங்கலுக்கு நாங்கள் தயாரித்த 'நாய் சேகர்' படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதன் பின் 2022 ஏப்ரல் தொடங்கி பீஸ்ட், கேஜிஎஃப்2, ஆர்.ஆர்.ஆர்., டான், விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா மற்றும் எங்கள் தயாரிப்பில் வெளியான லவ் டுடே படங்கள் மூலம் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழத்துவங்கின. எல்லோரும் கூறுவது போல் ஒரு பெரும் விடியலுக்கு முன்பாக கரும் இருள் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் மனம் தளராமல் இருந்த நிலையில் இந்திய சினிமாவின் பொற்காலமும் வந்தது. என் குடும்பத்தாருக்கும் AGS குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தான் எனது வலிமை. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நம்முன் உள்ள 2023-ஐ, காலையின் அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் தொடங்குவோம்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ags entertainment kalpathi archana love today instagram story