சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலிருந்து 14 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விடைப்பெற்றார். இதனை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் என் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தெலுங்கிலும் தற்போது பிக்பாஸ் நான்ஸ்டாப் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியது.இதிலும் முந்தைய சீசன்களின் போட்டியாளர்கள் ஹவுஸ்மேட்ஸ்களாக களமிறங்கினர்.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான நடிகை பிந்துமாதவி தமிழில் பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.