நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு இந்தியாவில் 4 லட்சத்தை எட்டியுள்ளது. ஏகப்பட்ட திரைப் பிரபலங்களும், சாமானிய மனிதர்களும் கொரோனா பாதிப்பால் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜித்தும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இச்சம்பவம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பி உள்ளது.

நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் அப்பா கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமானவர் நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால்.

நேற்று இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், பிக்ரம்ஜித்தும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1968-ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். ராணுவ வீரராக தேசத்துக்காக பாடுபட்ட அவர், கடந்த 2002ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, பாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார். 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பேஜ் 3 படத்தில் நடித்து தீர்த்துக் கொண்டார் இவர். 

தொடர்ந்து பாலிவுட் படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வந்த பிக்ரம்ஜித் கன்வர்பால் நடிகர் ஷாருக்கானின் ஜப் தக் ஹை ஜான் படத்தில் ராணுவ உயர் அதிகாரி வேடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இயக்குனர் கே.வி. ஆனந்த் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அஞ்சான் பட நடிகரான பிக்ரம்ஜித்தும் நேற்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.