“இந்தி தெரிந்தால் மட்டுமே உணவு விநியோகம்” என்று கூறிய ZOMATO நிறுவன ஊழியரால் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், சம்மந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்து, ZOMATO நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனங்கள் முன்னணியில் இருந்து வருகின்றது. 

இதில், சோமேட்டோ நிர்வாகம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது தற்போது வாடிக்கையாக நடந்து வருகிறது. 

இதற்கு முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சோமேட்டோ டெலிவரி பாய் ஒருவர், “நுகர்வோருக்கு வழங்க வேண்டிய உணவை எடுத்துச் சாப்பிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு பெங்களூருவில் உணவு வழங்கும் போது பெண் நுகர்வோரைத் தாக்கியதாக சோமேட்டோ ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பெண்ணிடம் சோமேட்டோ ஊழியர் மிக மோசமாக நடந்துகொண்டது தெரிய வந்தது. இதனால்,  சோமேட்டோ நிர்வாகம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி தினறியது.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டிவீட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். 

அந்த டிவிட்டில், “சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. 
இது தொடர்பாக, சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டு பணம் திரும்பி கேட்டபோது, அந்த ஊழியர் இந்தியில் பேசுமாறு அறிவுறுத்தினார். 

ஆனால், இந்தி தனக்கு தெரியாது என்று கூறியதால், தேசிய மொழியான இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதுடன், உங்கள் பணம் திரும்பக் கிடைக்காது என்றும் அந்த ஊழியர் பதில் அளித்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர் விகாஷ், இந்த நிகழ்வுகளை டிவிட்டரில் பதிவிட்டதுடன், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டு உள்ளார். அதனையடுத்து, நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்த நிலையில், #regectzomato என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதனால், பெரும் சர்ச்சை வெடித்த கிளம்பிய நிலையில், “இந்தி நாட்டின் தேசிய மொழி. எனவே, அனைவரும் இந்தி மொழி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது” என்று பதிலளித்த ஊழியரை அதிரடியாக பணி நீக்கம் செய்து சொமேட்டோ நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, இது தொடர்பான விளக்கத்தையும், அந்த நிறுவனம் தமிழில் வெளியிட்டு உள்ளது.

இது குறித்து சோமேட்டோ  நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரியில் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம் . பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என்று நம்புகிறோம்.  

மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரியின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. 

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கி உள்ளோம். எடுத்துக்காட்டாக நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் கோயமுத்தூர் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர்/சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம். உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்.  அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும், தெரிவித்து உள்ளது. 

இதனிடையே, ஜொமேட்டோ சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள திமுக எம்.பி. கனிமொழி, “வாடிக்கையாளர்களுக்கு இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. #Hindi_Theriyathu_Poda” என்று, பதிவிட்டு உள்ளார்.

அவரைப் போலவே, தருமபுரி எம்.பி செந்தில் குமார், “எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நுகர்வோர் ஏன் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? அந்த அடிப்படையில் உங்கள் நுகர்வோரை இந்திக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குகிறீர்கள். உங்கள் நுகர்வோரின் பிரச்னையைத் தீர்த்துவையுங்கள். மன்னிப்பு கோருங்கள்” என்று வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.