“முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிருப்தியில் உள்ளதாகவும், நேரம் வரும் போது அவரை நீக்கிவிட்டு, சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர் செல்வம் கட்சியை வழி நடத்துவார்” என்றும், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொன்விழா ஆண்டு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

அதிமுகவின் பொன்விழா நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அப்போது, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசயம் தான், தற்போது அதிமுகவில் வைரலாகி வருகிறது.

புகழேந்தி அளித்த பேட்டியில், “ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டு புலி வேடம் போடும் எடப்பாடியிடமிருந்து கழகத்தை மீட்போம்” என்று, சூளுரைத்தார். 

அத்துடன், “உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதம் வாக்குகளை பெற்று இருக்கும் ஆளுங்கட்சிக்கு வாழ்த்துக்கள் என்றும், திமுக நல்லாட்சியை அளித்து வருகிறது” என்றும், குறிப்பிட்டார்.

மேலும், “அதிமுக வேட்பாளர்கள் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பிறகும், அதிமுக தலைமையில் இருப்பவர்கள் எந்த ஒரு வாழ்த்தும் கூறாதது வருத்தமாக இருக்கிறது” என்றும், அவர் தனது கவலையை தெரிவித்தார். 

குறிப்பாக, “அதிமுக கட்சி திசை மாறிவிட்டது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்” என்றும், அவர் சூளுரைத்தார்.

அதாவது, “அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை கடந்து வேறு பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், தனக்கு தெரிந்து இப்படி ஒரு தோல்வியை அதிமுக கண்டதில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார்.

முக்கயமாக, “சசிகலா அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என்று, ஜெயக்குமார் கூறியது பற்றி” பேசிய புகழேந்தி, “சசிகலாவை அதிமுகவில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றும், கேள்வி எழுப்பினார்.

மிக முக்கியமாக, “எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், சரியான உரிய நேரம் வரும் போது எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு, சசிகலாவுடன் இணைந்து ஓபிஎஸ் கட்சியை வழி நடத்துவார்” என்றும், அவர் தெரிவித்தார். 

அத்துடன், “எடப்பாடி பழனிசாமி அனைவரையும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், எடப்பாடி தனது தொகுதியிலேயே தோற்று விட்டார்” என்றும், புகழேந்தி மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதே போல், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் முடியும்” என்றும் புகழேந்தி தெரிவித்தார்.