தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2 ஆம் கட்ட பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து
வருகிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து
தான் வருகிறது.

அதே நேரத்தில், தமிழகத்தில் திட்டமிட்ட படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதில், கல்லூரி
மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் கல்லூரி விடுதிகள் இயங்கவும் அப்போதே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன், தியேட்டர் மற்றும் டாஸ்மாக் உள்ளிட்டவைகள் இயங்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், “ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று அறிவத்த தமிழக அரசு, “வெள்ளி, சனி மற்றும்
ஞாயிற்றுக் கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும்” அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் அமைப்புகள் இது தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தன. இவற்றுடன், தமிழகத்தில்
கோயில்களை திறக்ககோரி பாஜக கட்சியும் போராட்டங்களை நடத்தியது. 

அதே நேரத்தில், தமிழகை அரசுக்கு பொது மக்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. அந்த கோரிக்கைகளில் “வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும்” என்றும், பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடரபாக வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக பதில் அளித்த தமிழக அரசு, “மத்திய அரசு வழி காட்டுதலின்படியே இந்த நடைமுறை தொடருகிறது” என்று, பதில் அளித்து வந்தது.

எனினும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பொது மக்களிடமிருந்து வந்த இப்படியான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, “தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று
கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்கப்படும்” என்று, தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் கோயில்கள் எப்போதும் போல் திறக்கப்படுகின்றன. இதனால், பொது மக்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, “தமிழகத்தில், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய, கலாசார நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும்” என்றும், தமிழக அரசு அறிவித்து உள்ளது
குறிப்பிடத்தக்கது.