‘ஜெய் பீம்’ திரைப்படத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசனுக்கு, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது ‘2டி’ நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை தயாரித்து, அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படமான ‘ஜெய் பீம்’ திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு, பிரபல ஓடி.டி. தளமான அமேசான் பிரைமில், கடந்த நவம்பர் 1-ம் தேதி வெளியானது.  

‘ஜெய் பீம்’ திரைப்படத்தை, ‘கூட்டத்தில் ஒருவன்‘ பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருக்கிறார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்க,  ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ‘கர்ணன்‘ திரைப்பட நடிகை ரஜிஷா விஜயன் , லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், தமிழ், ராவ் ரமேஷ், குரு சோம சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

k1

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில், நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு வேடத்தில் நடித்துள்ளார். ‘கர்ணன்‘ திரைப்பட நடிகை ரஜிஷா விஜயன், சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், முக்கிய கதாப்பாத்திரமாகவே பார்க்கப்பட்டது.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் நடிகர் சூர்யா மற்றும் ‘ஜெய் பீம்‘ திரைப்படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். விமர்சனரீதியாக ‘ஜெய் பீம்’ திரைப்படம் விமர்சகர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, வெகுவாக பாராட்டியிருந்தார். அதோடு நில்லாமல்,  திரைப்படத்தில் பணியாற்றிவர்களை நேரில் சந்தித்து பாராட்டியிருந்தார்.

தனது ட்விட்டர் பக்கத்திலும் நடிகர் கமல்ஹாசன், "#JaiBhim பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர் டி.ஜே. ஞானவேல் பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்" என பாராட்டி இருந்தார்.

K2

மேலும் ‘ஜெய் பீம் படக்குழுவினருடன், கமல் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா இல்லாததால், அவரது ரசிகர்கள் நடிகர் சூர்யா எங்கே என்று கேள்வியும் எழுப்பி இருந்தனர். 
இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் ட்வீட்டுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், "நீங்கள் வகுத்த பாதை.. விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் மனமார்ந்த நன்றி!!" என சூர்யா கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை போன்று, ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடக்கும் என்றே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.