வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்

 

KKSSR

சென்னை சேப்பாக்கம் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் , வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். திருவாரூர், கடலூரில் அதிகமாக மழை உள்ளது. சில இடங்களில் தரைப்பாளங்களுக்கு மேல் தண்ணீர் செல்கிறது ஆனால் பெரிதாக பாதிப்பு இல்லை. உயிரிழப்பு இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதிவரை எதிர்பார்க்கப்படுகிறது. 

பருவமழையால் மனிதனுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்பட கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். வானிலை அறிக்கையை தெரிந்துகொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம்.கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். மீனவர்கள் பாதுகாப்பிற்காக கடலோர காவல்படை தயாராக உள்ளனர் என கூறினார்.

மாநில பேரிடர் மீட்பு படையினர், ஆயிரம் பேரும், தன்னார்வலர்கள் ஒரு லட்சம் பேரும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன, நீர்நிலைகள் மற்றும் நீர்தேக்கங்கள் கண்கானிப்புக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 121 பாதுகாப்பு மையங்கள், 5106 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது. சென்னையில் 350 மையங்கள் தயாராக உள்ளது. கடந்த 5 மாத காலத்தில் மழைநீர் வடிகால்கள் தூர்வாருவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் இருக்கும் மரக் கிளைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கபடும் பட்சத்தில் , மிக விரைவாக மின்சாரம் அளிக்கவும் அறிவுறுதபட்டுள்ளது.
பயிர்சேதம் ஏற்படும் போது உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈடுகளை தாமதமாக வழங்கினால் பயனில்லை எனவே உடனடியாக வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது என்றும் திருவாரூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். தெரிவித்தார்

செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ள தகவல்கள்:-

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மற்றும் ஊரகப் பகுதிகளில் 14754.63 கீ.மீ நீளம் கொண்ட 83,319 மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் வெள்ள சேதம் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 3915 மரம் அறுக்கும் இயந்திரம், 2795 ஜெசிபி இயந்திரம்,
2115 ஜெனரேட்டர், 483 நீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும், வானிலை முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21000 உயர் VFH கருவிகளும், 600 செயற்கைகோள் தொலைபேசிகளும் , 296 NAVTEX and NAVIC உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பும் மையங்களும் 5106 நிவாரண முகாம்களில் தயார் நிலையில் உள்ளது