‘ஜெய் பீம்’ திரைப்படத்தை பொது இடங்களில் திரையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நடிகர் சூர்யா எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யாவின் ‘2டி’ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்,  தீபாவளியை முன்னிட்டு, அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். ‘ஜெய் பீம்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று, பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்த நிலையில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் பேருந்துகளில் கட்டணம் பெற்றுக்கொண்டு திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று கூட திருப்பூர் மாவட்டம்  அவிநாசியில் தாபா உணவகம் ஒன்றில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறையினர் ‘ஜெய் பீம்’ திரைப்படம், தாபா உணவகத்தில் திரையிடுவதை நிறுத்தினர்.

இரண்டு சிறப்புக் காட்சிகள் வெளியிட திட்டமிட்டு, ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு, நபர் ஒருவருக்கு டிக்கெட் கட்டணமாக 200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதும், ரசிகர்களின் இந்த செயலுக்கு, திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

D5

மேலும் நீட், வேளாண் சட்டங்கள் குறித்து குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா, தனது ரசிகர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்காமல் இருப்பதாகவும், ஓ.டி.டி படங்களை பொது வெளியில் திரையிட அனுமதி இல்லாத நிலையில், இது போன்ற செயல்கள், திரையரங்குகளை கடுமையாக பாதிக்கும் என தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியிருந்தனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ‘தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி, உரிமம் பெற்ற மற்றும் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களை மட்டுமே, பொது வெளியில் திரையிட வேண்டும். ஆனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், உரிமம் இல்லாத ஓட்டலில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிடுவதை தடுத்து நிறுத்தக்கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

பொதுவெளியில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை திரையிட கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ரசிகர்கள் பிரச்சனை செய்யாமல் இருப்பதற்காக, அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வரவேற்பும் தெரிவித்திருந்தார்.

d2

இந்த நிலையில் நடிகர் சூர்யா, தனது ‘2டி‘ எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘ ’ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. பொதுவெளியில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை வெளியிருவது சட்ட விரோதம். மீறி ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தனது அன்பான ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களே, பொதுவெளியில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை திரையிடும் சட்டவிரோதமான செயல்களுக்கு துணைபோக வேண்டாம் என்று நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

Streaming the movie #JaiBhim in public is illegal. Necessary legal action will be taken against anyone screening the film for commercial benefits.

We kindly request the #AnbaanaFans and loving audience not to support such illegal activities. pic.twitter.com/h0tqMYX9sN

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) November 2, 2021