இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது, இன்றைய தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

அத்துடன், தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு இந்த முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக, தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் அவசியம் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என்று, தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதாலும், பொது மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே வழிபாடு செய்து வருகின்றனர்.

பூஜை பொருட்களை வாங்க கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. 

அவற்றுடன், பூ மற்றும் பழம் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. அதே போல், விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் ஒரு நாளில் வருவதால் வழக்கத்தை விட பூ, பழங்கள் விலை இரு மடங்காக அதிகரித்துக் காணப்படுகிறது.

மேலும், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை சிலைகளைக் கரைக்க இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளைத் தனி நபராகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும், அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டின் அருகில் உள்ள கோயில்களில் விநாயகர் சிலைகளை வைத்து விட்டுச் செல்லவும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

அதே நேரத்தில், கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்து, நீர்நிலைகளில் கரைக்கத் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை நகரம் முழுவதும் 12 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் படி, சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையாயினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கிட்டதட்ட 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் தங்களது வாழ்த்துகளை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.