இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான சௌரவ் கங்குலி இந்தியாவின் சிறந்த இடதுகை ஆட்டக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் ஆகவும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஜொலித்தவர் சௌரவ் கங்குலி.

கிரிக்கெட் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் என இந்திய கிரிக்கெட் அணி தள்ளாடிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே அவ்வளவுதான் முடிந்தது என ஒட்டுமொத்த இந்தியாவும் பேசிய சமயத்தில் அணி தலைவருக்கான பொறுப்பை ஏற்று புதிய இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்து எதிர்கொண்ட சவாலான போட்டிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவர் சௌரவ் கங்குலி.

இன்று விராட் கோஹ்லி, மகேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் எப்படியோ அதைவிட அதிகமாக சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியின் பெரும் தூண்களாக தாங்கி நின்றனர். இந்திய அணியின் சிறந்த வீரரான சௌரவ் கங்குலி தற்போது இந்தியாவின் பிசிசிஐ தலைவராக பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மகேந்திர சிங் தோனியின் பயோபிக் திரைப்படமாக M.S.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து முன்னணி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படமாக நடிகை டாப்ஸி நடிக்கும் சபாஷ் மித்து திரைப்படம் தயாராகி வருகிறது.

அந்த வகையில் தற்போது சௌரவ் கங்குலியின் பயோபிக் திரைப்படமும் உருவாகவுள்ளது.  பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான LUV ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சௌரவ் கங்குலி தன்னுடைய பயோபிக் திரைப்படம் தயாரானால் அதில் தன்னுடைய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். எனவே இந்த பயோபிக் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.