அரசு மருத்துவமனை நோயாளிக்கு பார்சல் வாங்கிச்சென்ற இட்லியில் தவளை இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

frog

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் உள் மற்றும் புறநோயாளிகளாக தினந்தோறும் சுமார் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களின் வசதிக்காக இந்த பகுதியில் ஏராளமான தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், நேற்று காலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கும்பகோணம் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசனுக்கு, இவரது உறவினர் இட்லி பார்சல் வாங்கிச் சென்றார்.

மருத்துவமனையில், இட்லி பார்சலை முருகேசன் பிரித்து சாப்பிட முயன்றபோது ஒரு இட்லியில் கறுப்பாக ஏதோ தென்பட்டுள்ளது. அதனை உற்று பார்த்தபோது இறந்த நிலையில் தவளை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக தவளை கிடந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்று, உரிமையாளரிடம் புகார் செய்தனர்.

இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர், அவர்கள் வாங்கிச் சென்ற இட்லிக்கு உரிய பணத்தை கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை அவர்களின் கண்முன்னே கீழே கொட்டினார். பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஓட்டலை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லெமன் சாதத்தில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இட்லியில் தவளை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.