தனியார் பள்ளி பிரின்ஸ்பல் பள்ளியிலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மருதவஞ்சேரியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் சத்யா என்ற பெண் அந்த பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். 

இவர், தொடக்கத்தில் அந்த பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்த நிலையில், அடுத்த சில வருடங்களில், அந்த பள்ளியின் முதல்வராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளார்.

இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் அந்த பள்ளியின் தாளாளர் திட்டியதாகவும், இதனால் வேலை பார்க்க பிடிக்கவில்லை என்று கூறி அவரது தந்தையிடம் சத்யா கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சயாக, நேற்றைய தினம் “பள்ளியின் தாளாளரை பார்த்து வருவதாக” தனது தந்தையிடம் சத்யா கூறி விட்டு எப்போதும் போல் பள்ளிக்கு வந்திருக்கிறார் சத்யா. 

அப்போது, பள்ளியின் தாளாளர் வெற்றிச்செல்வம், பள்ளியின் முதல்வர் சத்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த பள்ளியின் முதல்வர் சத்யா, தான் பணியாற்றும் பள்ளியிலேயே பூச்சி மருந்தை குடித்துவிட்டு திடீரென  தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் உடனடியாக சத்யாவை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். 

அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சத்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குறிப்பாக, பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்த சத்யா, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன், தற்கொலை செய்துகொண்ட சத்யாவிற்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும், இவரும் அதே தனியார் பள்ளியில் படித்து வருகிறார் என்பதும் கூறப்படுகிறது.

இதனிடையே, சத்யாவின் தற்கொலைக்கு காரணமான பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, பேரளம் காவல் நிலையத்தில் சத்யாவின் தந்தை கணேசன் புகார் அளித்து உள்ளார். 

இதனையடுத்து, இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சத்யா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.