சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுப் பேருந்தில் திடீரென ஏறி ஆய்வு மேற்கொண்டதுடன், சக பயணிகளிடம் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது, மிக விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதில், தமிழகத்தில் மிக அதிகப்படியான பேருக்கு தடுப்பூசி போடும் வசதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வந்தது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2 வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 3 வது முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேரும், 4 வது முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் பேரும், 5 வது முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அத்துடன் ஞாயிற்றுக் கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமில், 2 வது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். 

இந்த மெகா தடுப்பூசி முகாமுக்காக கையிருப்பில் இருந்த 66 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தான், சென்னை கண்ணகி நகரில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆய்வு செய்தார். 

இதையடுத்து, பேருந்தில் இருந்த சக பயணிகளின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது, பேருந்தில் இருந்த சக பெண் பயணிகளிடம் வணக்கம் செலுத்தி நலம் விசாரித்த முதலமைச்சர், “மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது?” என்பது பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்.

அதாவது, தி.நகர் - கண்ணகி நகர் வரை சென்ற M19B பேருந்தில் ஏறிய முதலமைச்சர், சக பயணிகளையும் நலம் விசாரித்ததுடன், பயணிகள் சிலருடன் அவர் செல்பியும் எடுத்துக்கொண்டார். இதனால், பேருந்தில் இருந்த சக பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கண்ணகி நகர் நடுநிலைப் பள்ளி, எழில் நகர் நடுநிலைப் பள்ளி, கண்ணகி நகர் சுகாதார நிலையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். 

அத்துடன், அங்கிருந்த பொது மக்களிடம் அவர் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு, அங்கு பணியாற்றி வந்த சுகாதாரத்துறை ஊழியர்களுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

இந்த ஆய்வின் போது, முதலமைச்சருடன், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதே போல், சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தருது குறிப்பிடத்தக்கது.