“தமிழகத்தில் நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகளை முழுமையாக திறக்க அனுமதி” அளித்து உள்ள தமிழக அரசு, “அனைத்து வகை கடைகள் மற்றும்
உணவகங்களை இரவு 11 வரை திறக்கவும்” தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் கட்ட தொற்று எண்ணிக்கையானது சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக
அளித்து வருகின்றன. 

எனினும், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு தற்போது வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் ஓரளவு
கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு தொழில்களை நடத்தவும் தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது.

அதே நேரத்தில், பக்கத்து மாநிலமான கேரளாவில் ஓணம் உள்ளிட்ட பண்டிகையை மக்கள் கொண்டாடியதால், அங்கு கொரோனா தொற்று வெகு வேகமாக பரவியது. 

இதனால், தமிழகத்தில் விழா கொண்டாட்டங்கள், மத கூடுகைகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது. 

இவற்றுடன், தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாடுகளை நடத்த பொது மக்களுக்கு தடை விதிக்கபட்டு இருந்தது.

இந்த நிலையில் தான், நாளைய தினம் விஜயதசமி வருவதால், கோவில்களைத் திறக்கும் படி அரசுக்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. 
இது தொடர்பாக கருத்து கூறிய சென்னை உயர்நீதிமன்றமும், “இது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்” என்றும், கூறியிருந்தது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு குறித்து நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதாவது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட கொரோனா தடுப்பு மருத்துவ நடவடிக்கைகள், கூடுதல் தளர்வுகள், விஜயதசமி தினத்தன்று
கோயில்கள் திறப்பு, வார இறுதி நாட்களில் கோவில்கள் திறப்பு மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான முடிவுகளை தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ளது.

தமிழக அரசு சற்று முன்பாக அறிவித்துள்ள அறிவிப்பில்,

- தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

- ஆனால், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய, கலாசார நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும் என்றும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.

- கோயில்களை தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமைகளில் பொது மக்கள் கடற்கரைகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகளை முழுமையாக திறக்கவும் அனுமதி அளித்து உள்ளது.

- அதே போல், அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்களை இரவு 11 வரை திறக்கவும்” தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

- தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- குறிப்பாக, நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு
உத்தரவிட்டு உள்ளது.