“குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார்” என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் 16 வது சட்டசபைக்கான தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்ற நிலையலில், திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. 

இதனையடுத்து, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் நாளில் 5 முக்கிய திட்டங்களுக்கு அவர் கையெழுத்து போட்டார். 

முக்கியமாக, கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கும் கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதன் தொடர்ச்சியாக, திமுக அறிவித்த அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது வரை தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒற்றாக நிறைவேற்றி வருகிறது.

இந்த சூழலில் தான், மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் குலுக்கல் முறையில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

அவர்களுக்கு பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வாஷிங்மெஷின், சைக்கிள், மிக்ஸி, குக்கர் போன்ற பரிசுகளை வழங்கினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “தடுப்பூசி செலுத்திக்கொள்வதில், மதுரை மாவட்டம் ஒரு முன் மாதிரியான மாவட்டமாக செயல்பட்டு வருவதாக” குறிப்பிட்டார். 

“மதுரை மாவட்டத்தில் இது வரை 62 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும், சிறப்பு முகாம் மூலம் நாளை மாவட்டம் முழுவதும் 1.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என்றும், தெரிவித்தார். 

அதே போல், “குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்தார். 

மேலும், “திமுக அறிவித்த அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றுமு், வருவாய்த்துறையை போல பத்திரப்பதிவு துறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார். 

“வணிக வரித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தீபாவளி விற்பனை முறைகேடுகளை கண்காணிக்க 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

இதனிடையே, “மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை அளித்தது போல்  தமிழக அரசு, ஊழியர்கள் , ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கான  14 விழுக்காடு அகவிலைப்படி தீபாவளி பரிசாக  உடனே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.