தமிழகத்தில் கொரோனா பரவலால்  9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த சூழலில், பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்துக்கேட்கப்பட்டு நேற்று முதல் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 
பள்ளி திறந்த முதல் நாளிலேயே மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


பள்ளி திறக்கும் தேதி அறிவித்த நாள் முதல், பொதுத்தேர்வு குறித்து அச்சத்தில் இருந்த பிளஸ்-2 மாணவர் சக்தி தருண் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். 


சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவன் சஞ்சய்குமார், மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று பள்ளி திறந்தவுடன் , பள்ளிக்கு சென்ற சஞ்சய்குமார், தலைமுடி அதிகமாக வளர்த்து இருந்ததால் ஆசிரியர் சஞ்சயை கண்டித்ததுடன், முடி வெட்டிவிட்டு பள்ளிக்கு வருமாறு வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனால் சஞ்சய்குமார் மனமுடைந்து வீட்டுக்கு சென்றவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். 

இதேபோல் பண்ருட்டி சேர்ந்த பிளஸ்-2 மாணவி கீர்த்தனா, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது சகோதரி தன்னை விட்டு பள்ளிக்கு சென்றதால், முதல் நாளே பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என அஞ்சி தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.