“போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன், ஒரு தந்தையைப் போல பேசி பாலியல் தொல்லைகள் அளித்தார்” என்று, வீராங்கனைகள் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தெரிவித்து உள்ளனர்.

பயிற்சிக்கு வந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து உள்ள நிலையில், அவர் மீது கடந்த மாதம் 250 பக்க குற்றப்பத்திரிகையைத் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். 

சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சியாளரான 59 வயதான நாகராஜன் என்பவர், சொந்தமாக விளையாட்டு பயிற்சி மையத்தை நடத்தி வந்த நிலையில் தான், தன்னிடம் பயிற்சிக்காக வந்த மாணவிகளிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், 20 க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பதாகவும் அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் தான், தடகள பயிற்சியாளரான நாகராஜன் கொடுத்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி, பாதிக்கப்பட்ட சில வீராங்கனைகள் அளித்துள்ள அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

அதாவது, “பயிற்சியாளர் நாகராஜன், சிறப்பு பயிற்சி அளிப்பதாகக் கூறி, உடலுக்கு மசாஜ் செய்து பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று, பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக, “தேசிய அளவில் ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை ஒருவருக்கு நாகராஜன் கொடுத்த பாலியல் தொல்லையால், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், மற்றொரு வீராங்கனைக்கு நரம்பு பிரச்சனை ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளம் வீராங்கனைகள்” அப்பாவியாகத் தெரிவித்து உள்ளனர்.

மிக முக்கியமாக, “நாகராஜனால் பாலியல் தொல்லைக்கு ஆளான வீராங்கனை ஒருவர், தற்போது வரை திருமண உறவில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகவும்” அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், “அந்த வீராங்கனை ஆண்களைக் கண்டால் அஞ்சும் நடுங்கும் வகையில் மன ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், “16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த இளம் வயது வீராங்கனையிடம், நாகராஜன் ஒரு தந்தையைப் போல் பேசி, பயிற்சிக்குப் பிறகு காத்திருக்கச் சொல்லி நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்” பாதிக்கப்பட்ட இளம் பிஞ்சுகள் பகிரங்கமாகவே  குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “தன்னை அவர் கடவுள் எனக் கூறி இளம் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்தார்” என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனால், சற்று ஓய்ந்திருந்த  தடகள பயிற்சியாளர் நாகராஜன் வழக்கில், பல அதிர்ச்சியூட்டு தகவல்கள் வெளியாகி கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.