கொரோனா 3 வது அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால், தமிழகத்தில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் அக்டோபர் 31 ஆம் துதி வரை தடை தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய் தொற்றின் 3 வது அலையின் தாக்கம் தமிழ் நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதி அதிகப்படியான பொது மக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திய நபர்களில் சுமார் 12 சதவீதம் நபர்களுக்கு 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது என்றும், 45 சதவிகித நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது என்றும்” அவர் கூறியுள்ளார். 

மேலும், “9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வகுப்பு நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய்த் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்றும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவற்றுடன், “கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

“பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்றும், தலைவர்கள் சிலைகளின் மாலை அணிவிக்கும் நிகழ்வில் ஆட்சியர் மட்டுமே பங்கேற்க அனுமதி பெற வேண்டும்” என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தலைவர்களை சார்ந்த குடும்பத்தினர், பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தலா 5 பேர் உரிய அனுமதியுடன் விதிகளை பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்” என்றும், முதலமைச்சர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “நிஃபா வைரஸ் தாக்கம் காரணமாக கேரளாவுடனான பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் நிஃபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.