ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்திருப்பது அதிகம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், “உளவுத்துறை பின்புலம் கொண்டவரை தமிழக ஆளுநராக நியமித்ததில் உள் நோக்கம் இருப்பதாக” காங்கிரஸ் புதிய சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக இருப்பவர்களில் வெகு சிலர் மட்டுமே அரசியல் பின்னணி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். 

அந்த வகையில், தற்போது தமிழகத்தின் புதிய ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, காவல் துறையை பின்னணியாக கொண்ட நபராக அறியப்படுகிறார். 

இப்படியாக காவல் துறையின் பின்னணிகொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவது, இது 2 வது முறையாகும். 

இதற்கு முன்பாக, கடந்த 2002 ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் டிஜிபி ராமமோகன் ராவ், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைப் பிடித்த ராமமோகன் ராவ், அடுத்த 2 ஆண்டுகளிலேயே வட கிழக்கு மாநிலங்களுக்கு அவர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

ஆனால், அந்த இட மாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. என்றாலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில், ஆளுநர் பதவியிலிருந்தே ராஜினாமா செய்தார் ராமமோகன ராவ்.

இந்த சூழலில் தான், கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியை, தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். 

தற்போது, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 4 மாதங்களில் புதிய ஆளுநர் நியமனம்  நடைபெற்றுள்ளது, அதுவும் காவல் துறை பின்புலம் கொண்ட ஒருவரை ஆளுநராக நியமித்து இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அதாவது, மிகவும் பிரச்சனைக்குறிய பகுதிகளான காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக நிலவி வந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆர்.என் ரவியின் பங்கு மிகவும் முக்கியம் என்றே கூறப்படுகிறது. 

இவர் வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை சரணடைய வைத்து அமைதிப் பாதைக்கு திரும்ப வைப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இவற்றுடன், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதில் ஆர்.என்.ரவி மிகச் சிறந்த நிபுணர் என்றும், கடந்த காலங்களில் போற்றப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் தான், “தமிழகத்தின் அருகில் இருக்கும் இலங்கையில், சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் விளைவுகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம்” என்றும், கூறப்படுகிறது.

ஆனால், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும், மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர் எதிர் தளங்களில் இருக்கும் இப்படியான சூழலில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை, நியமனம் செய்திருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் தான், “காவல் துறையில் மிகவுமு் பின்புலம் கொண்ட ஆர்.என். ரவியை, தமிழக ஆளுநராக நியமித்ததில் உள் நோக்கம் இருப்பதாக” காங்கிரஸ் புதிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என். ரவியை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்த சூழலில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும்,  எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது” என்றும், குற்றம்சாட்டி உள்ளார். 

“இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம் என்றும், முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரன் பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே வேடிக்கைப் பார்த்து நகைத்தது” என்றும், அவர் மேற்கொள் காட்டி உள்ளார். 

“விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே, ஆர்.என். ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ? என்று சந்தேகப்படுகிறேன்” என்றும், அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

“புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன்” என்றும், கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.