“பண்டைய தமிழ் சமூகத்தின் அடிச்சுவடுகள் எங்கெல்லாம் உள்ளதோ அதனைத் தேடி உலகெங்கும் பயணம் செய்வோம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் படி பேசிய முதலமைச்சர், “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்” என்று, குறிப்பிட்டுப் பேசினார்.

“தமிழினத்தின் பெருமையைப் பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்று, சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறளைத் தீட்டியது, பூம்புகார் கோட்டம் அமைத்தது, தமிழை கணினி மொழி ஆக்கியது, தமிழாசிரியர்களைத் தலைமை ஆசிரியராக்கியது” என்று, தமிழக அரசின் பெருமைகளை நினைவுகூர்ந்தார்.

“பண்டைய நாகரிகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ மறுக்கவோ முடியாது” என்றும், குறிப்பிட்டார். 

“கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது” என்றும், கவலைத் தெரிவித்தார்.

“சிவகங்கை கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும், வியக்க வைக்கும் செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட காளைகள், கறுப்பு சிவப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும்” அவர் கூறினார்.

“கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளதையும்” அவர் மேற்கொள் காட்டினார்.

மேலும், “கார்பன் ஆய்வின் முடிவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற இனமாகத் தமிழினம் விளங்கியுள்ளது என்றும்; கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன” என்றும், அவர் நினைவுகூர்ந்தார்.

“கீழடி நாகரிகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், கி.மு. 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டுள்ளது என்றும்” குறிப்பிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், “அப்போதைய தமிழர்கள் வெளி நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.

அதன் படி, “ஆதிச்சநல்லூருக்கு அருகில் கண்டறியப்பட்ட நெல்மணிகள், அமெரிக்காவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் நெல் மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டு உள்ளது” என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், “5 கோடி ரூபாய் அகழ்வாய்வுப் பணிக்கு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், 15 கோடி ரூபாய் செலவில் நெல்லையில் நவீன பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், முதல்கட்டமாக முசிறி, கேரள மாநிலத்தில் பட்டணம் என அழைக்கப்பட்டுள்ளது” என்றும், அவர் அறிவித்தார். 

முக்கியமாக, “கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழரின் பண்பாட்டைத் தேடி ஆய்வுகள் செய்யப்படும் என்றும், அறிவியல் வழி நின்று இந்தியத் துணைக் கண்டத்தில் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார்.

இதனிடையே, “உரத்துச் சொல்வோம்; இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும் என்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும், பாராட்டும்” என்றும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார்.