நடிகர்கள் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல, இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வராது என சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், அதன் பின்னர் நடிகராகவும் இருந்து மக்களிடையே பிரபலமானர் சீமான். 

அவர் இயக்குநராக இருக்கும்போது, காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, தமிழ் திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட அடையாள போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியதன் மூலமாக, சீமானின் உணர்ச்சி மிகுந்த பேச்சு, பொது மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.

இதனையடுத்து, சீமான் “நாம் தமிழர்” என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் பயணப்படத் தொடங்கினார். 

அத்துடன், முழு நேர அரசியலில் ஈடுபட்ட பிறகு, அவர் தொடர்ந்து பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இடையிடையே, அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருவது உண்டு.

எனினும் தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சில அரசியல் கட்சிகள் அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

இதில், சினிமா துறையில் இருந்து நடிகர் கமல் ஏற்கனவே அரசியல் கட்சித் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதே போல், நடிகர் ரஜினிகாந்த் கூட டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சித் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக, புதிதாகத் தொடங்க உள்ள அரசியல் கட்சிகள் குறித்து, நடிகர் ரஜினிகாந்த், தனது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மேலும், தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்க்கு கூட அரசியல் ஆசை இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்களின் அரசியல் என்ட்ரி குறித்து ஆவேசமாகப் பேசினார்.

குறிப்பாக, நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து மிக கடுமையான விமர்சனத்தை முன்வைத்த சீமான், “நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், “காலா” படத்தில் பேசிய, 'இது என் நிலம், என் உரிமை' என்ற, வசனத்தையும் குறிப்பிட்டு” பேசினார். 

முக்கியமாக, “வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர்கள் ரஜினி - கமல் உள்ளிட்ட நடிகர்களை அடிக்கும் அடியில் விஜய் உட்பட இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது” என்று, ஆவேசமாகப் பேசினார்.

“இது, நடிகர் விஜய் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும்” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். 

“அரசியலில் ஈடுபடாமல், நடித்ததை மட்டுமே கொண்டு தேர்தலை சந்திப்பதை ஏற்க முடியாது” என்றும், சீமான் சூளுரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடியார் தமிழர். அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால், நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம். அதற்காக, மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும், சீமான் ஆவேசமாக பேசினார்.

“முல்லை பெரியாறு அணையைத் தாரை வார்த்தது எம்.ஜி.ஆர் தான் என்றும், பிரபாகரன் மீது பற்று கொண்டதால் 100 சதவீதம் எம்.ஜி.ஆரை நாங்கள் மதிக்கிறோம்” என்று குறிப்பிட்ட சீமான், “ஆனால் எம்.ஜி.ஆர் அப்படி என்ன நல்லாட்சி தந்தார்?” என்றும், சீமான் கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேட்டி, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு, பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.