தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு தயாரிப்பில் அசுரன், கர்ணன் திரைப்படங்களைத் தொடர்ந்து சகோதரர் செல்வராகவன் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். கர்ணன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் குறித்து இயக்குநர் செல்வராகவனே அவ்வபோது தகவல்களை வெளியிட்டு வருகிறார். 

டிசம்பர் மாத ஆரம்பத்தில் தனுஷுடன் என்றால் அது எப்போதும் விசேஷமானதுதான் என்று குறிப்பிட்டு, தான் எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்துடன் ட்வீட் செய்தார் செல்வராகவன். இதன் பிறகே இந்தப் படம் உறுதியாக நடைபெறுகிறது என்பது ரசிகர்களுக்குப் புரிந்தது. சில நாட்கள் கழித்து, தான் கேமிராவுக்கு பக்கத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு முதற்கட்டப் பணிகளில் என்று தெரிவித்திருந்தார் செல்வராகவன். 

படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டையும் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பகிர்ந்துள்ளார். முன்னதாக இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. தற்போது அது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா இந்த மூவர் கூட்டணிக்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் படைப்பில் வெளியான அத்தனை பாடல்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. செல்வராகவன் படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசைக்கும் பாராட்டு கிடைத்துள்ளது. தற்போது இந்த புதிய அறிவிப்பும் யுவன் - செல்வராகவன் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

தற்போது படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருண் மாதேஸ்வரனின் முழுத் திரைக்கதையையும் படித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையை இப்போதுதான் அவருடன் படித்து முடித்தேன். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அசாதாரணமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.