பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். 

இதனையடுத்து. கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்ததாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த அறையை காலி செய்ய இளையராஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த இளையராஜா, குறிப்பிட்ட அந்த அறையை காலி செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால். இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 

மேலும், இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “பிரசாத் ஸ்டூடியோவில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், நான் கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்குக் கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு உள்ளது என்றும், அதை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்க ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்தபோது, பிரசாத் ஸ்டூடியோ சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் 
பாண்டியன் ஆஜராகி, இளையராஜா பயன்படுத்திய இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும், அங்கு இளையராஜா வைத்திருந்த அனைத்து பொருட்களும் வேறு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும், அதை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்” என்றும், குறிப்பிட்டார். 

“ஆனால், தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் கேட்டு தெரிவிக்கிறேன்” என்றும், பிரசாத் ஸ்டூடியோ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். 

அதற்குப் பதில் அளித்துப் பேசிய நீதிபதி, “எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில், 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பதைத் தாண்டி, நீண்ட கால பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார். 

“அதற்காக ஏன் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்கக் கூடாது?” என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார். 

மேலும், அதன் பின்னர், விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்குத் தள்ளி வைத்த நீதிபதி, “அதற்குள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பித்தார். 

அதே போல், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி விடுவார்கள் என்பதால், அவரை அனுமதிக்க முடியாது என்றும், அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம்” என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த நீதிபதி, “பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம்” என்றும், யோசனை கூறினார். 

அத்துடன், இது தொடர்பாக இரு தரப்பும் நாளை விளக்கமளிக்க வேண்டும்” என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.

அதே போல், “சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்கத் தயார்” என்றும், தெரிவிக்கப்பட்டது. 

மேலும், “பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது என்றும்; உதவியாளர், இசைக்கலைஞர், வழக்கறிஞர் மட்டும் இளையராஜாவுடன் வரவேண்டும்” என்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் நிபந்தனை விதித்தது. 

இதற்கு, இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் மனு தாக்கல் செய்யப்படும் என நேற்று இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது, “பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன்; எனது பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்; வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.