செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளியால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே படுத்திருந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென அந்நோயாளி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அருகே உள்ள ஸ்லேப்பின் மேலே விழுந்த அவர் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடி உள்ளார்.  

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இதனைக்கண்ட அங்கிருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் விரைந்து சென்ற தற்கொலைக்கு முயன்ற நோயாளியை காப்பாற்றினர். தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து தற்கொலைக்கு முயன்ற நபரை விசாரணை செய்ததில் அவர் பெயர் சந்துரு என்ற சந்திரபாபு என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.