தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி, தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக “தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி ஏன் உயர்த்தப்பட்டது?” என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 வது நிதி ஆணையமானது, தனது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளதை குறிப்பிட்டு இருந்தது.

எனினும், இதனை ஏற்க மறுத்த தமிழக எதிர் கட்சிகள், தமிழக முழுவதும் நேற்றைய தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் தமிழக சட்டசபை தொடங்கிய நிலையில், “சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்” என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அப்போது, இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு “கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துவரி 200, 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது” என்று, கூறினார்.

இதனையடுத்து, தமிழக சட்டசபையில் சொத்துவரி உயர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொது மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்திருந்ததது என்றும், மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பற்றாக்குறையால் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூட சிரமம் ஏற்பட்டது” என்றும், குறிப்பிட்டார். 

“ஆனால், இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும், அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்து அரசிடம் நிதியை எதிர்பார்ப்பார்கள்” என்றும், கூறினார்.

அத்துடன், “சொத்துவரி உயர்வை மனம் உவந்து உயர்த்தவில்லை என்றும், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காமல், சொத்துவரி உயர்த்தபட்டு உள்ளது” என்றும், முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

“சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், 83 சதவீத மக்களை இந்த சொத்துவரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை” என்றும், முதல்வர் விளக்கம் அளித்தார்.

“தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் தான், இந்த சொத்து வரி உயர்த்தப்பட்டது” என்றும், முதலமைச்சர் தெளிவாகவே எடுத்துக்கூறினார்.

“சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால், மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும், அரசின் முயற்சிக்கு எந்த வித்தியாசம் இன்றி அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், “மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம்” என்றும், எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

இப்படியாக, சொத்துவரி உயர்வு தொடர்பாக முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.